21.2.11

மதம் – மண் – இனம் – மொழி – பண்பாடு


ஆகவே, ஓர் இனத்திற்கு உயிர் நாடியாக இருப்பது மதம் என்பதும் இனம் வளர்வதற்கு ஆதாரமாய் இருப்பது மண் என்பதும் மண்ணை இழந்த இனம் சிதறிப் போகும் என்பதும் மதத்தை இழந்த இனம் மறைந்து போகும் என்பதும் நமக்கு விளங்குகின்றன. 

மண்ணை இழந்த எத்தனையோ இனங்கள் சிதறிப் போனதையும் மதம் இல்லாமல் சிதறிப் போன இனங்கள் மறைந்து போனதையும் நாம் உலக வரலாற்றில் காணுகின்றோம்.

ஆகவே, தமிழ் இனம் மறையாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழர் சமயமும் தமிழ் மண்ணும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.  1. இனம்; 2. மதம்; 3. மண் ஆகிய மூன்றும் பாதுகாக்கப்பட்டால் மொழி, பண்பாடு ஆகியவை பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, தமிழ் இனத்தின் வாழ்வுக்கு, தமிழர் சமயத்தையும் தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரியதாகும். 

உணர்த்தப்படல் வேண்டும்
தமிழ் இனத்தின் வாழ்வுக்கு, தமிழர் சமயத்தையும் தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்னும் உண்மை தமிழ் இன மக்கள் ஒவ்வொருவருக்கும் சரியாக உணர்த்தப்படல் வேண்டும்.  காரணம், தமிழர் சமயம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றமையால் தமிழர் சமயமே இந்து சமயம் என்னும் வரலாற்று உண்மை புரியாமல் இருக்கிறது.

மாற்றியமைக்க வேண்டும்

இந்து சமயத்திற்கும் இந்துத்துவாவிற்கும் உள்ள வேறுபாட்டை உணரத் தெரியாமல் இந்து சமயம் ஆரியர்களுடையது என்னும் தவறான கருத்து தமிழர்களிடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டுமானால் இந்து மதமாகிய தமிழர் சமயத்தின் வரலாற்றுச் சிறப்பைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். 

நெஞ்சில் முள்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்றால், திராவிட இனம் ஆரிய இனத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கருத்துகள் அவை என்பதை நாம் அறிய வேண்டும்.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்துத்துவா வேறு; இந்து மதமாகிய தமிழர் சமயம் வேறு என்று வேறு பிரித்துக் காட்டும் ஆராய்ச்சிகள் வெளிவரவில்லை.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்த ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்குமானால் கட்டாயம் நமக்கு விடுதலையை வாங்கித் தந்திருப்பார்.  ‘நெஞ்சில் ஒரு முள்ளோடு நான் செல்லுகிறேன்’ என்று கூறிச் சென்றிருக்க மாட்டார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

((பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

2 கருத்துகள்:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நண்றீ. வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல பதிவு.

Post a Comment