19.11.10

கடவுளைச் சொல்லக் காசு எதற்கு?

இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பெயரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கிறார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகிறார்கள்.  இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள் துறவிகள் மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துகளும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?  

அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கிறதென்று எந்தப் பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா?  ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா?  என்று கேட்கின்றேன்.

ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குளவிக்கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள்.  இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குளவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை ஒட்டகை குதிரை பல்லக்கு தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?                                                                                                              (தொடரும்)
(பெரியார் - குடியரசு – சொற்பொழிவு – 14.09.1930)

PDF இல் சேமிக்க‌

17.11.10

கேள்வி – விடை

கே: கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம் செய்து சுயநல லாபம் அடைவது, உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசீயக் கட்சி முதலிய பல கட்சிகள்
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது!
கே: ஏன்?
வி: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை.  பணம் கேட்பதில்லை.  உத்தியோகம் கேட்பதில்லை.  பதவி கேட்பதில்லை.  பட்டம் கேட்பதில்லை.  அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும் பணத்தையும் செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
(குடியரசு – உரையாடல் – 21.12.1930)
PDF இல் சேமிக்க‌

7.11.10

இல்லது என் இல்லவள் மாண்பானால்?


அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச்சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.  பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.  புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு.  தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்?  ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமானதாகும்.  தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும்.  அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது. 

            தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும்.  பத்திரிகைகளைப் படிக்க வேண்டும்.  படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும். 

            வீட்டு வேலை செய்வது தான் தங்கள் கடமை என்பதை மறந்துவிட வேண்டும்.  புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.  இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்தி அவர்களுக்கு தக்க பயிர்ச்சி கொடுக்க வேண்டும். 

(பெரியார் 10.07.1930 இல் விருதுநகர் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி – 13.07.1930 நாளைய குடியரசு இதழில் வெளியானது)
PDF இல் சேமிக்க‌