30.10.10

அன்றே சொன்னார் பெரியார்!


முதலமைச்சர் திரு. காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதிமன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது; இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும், சட்டத் துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றையப் பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதாடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில் மொழி பெயர்த்துவிட்டால் நீதியின் விலை இவ்வளவு அதிகமாயிருக்காது.

மற்ற விஞ்ஞான நூல்களைப் போன்ற மொழி பெயர்ப்புத் தொல்லை சட்டப்புத்தகங்களின் மொழி பெயர்ப்பில் இல்லை. சிறப்பான ஒரு சில சொற்களை இங்கிலீஷிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு தனி மொழி நாடாகப் போகிறது. அதுமுதலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்களிலாவது தமிழில் நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் இருக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பிறகு 1957 ஜனவரி முதல் உயர்நீதிமன்றத்திலும் தமிழில் நடக்கவேண்டுமென்று உத்தரவிடலாம்.
தன்னலம் கருதாத் தலைவர்கள்
தன்னைப்பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப்படுகிறது என்பதைக் குற்றவாளி உணர்ந்துகொள்ளவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார்.


ஆம்! இதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். இன்று நீதிமன்றமும் கோவிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒன்றில் இங்கிலீஷில் பேசும் வக்கீல்! இன்னொன்றில் சமஸ்கிருதத்தில் பேசும் அர்ச்சக வக்கீல்! வக்கீல் கூட்டமும் அர்ச்சகக் கூட்டமும் வயிற்றுப் பிழைப்பு நடத்துவது, மற்றவர்களின் மடமையை மூலதனமாக வைத்துத்தான்.


ஆகவே, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். இதற்கு முன்னணி வேலையாக, ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பொறுப்பையும், செலவையும் ஆட்சியாளரே ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்ப் புலவர்களாயுள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

PDF இல் சேமிக்க‌