அந்த ஆன்மீகக் காரணம் என்ன?
உலக மக்கள் அனைவரையும் தங்கள் இனத்தவராக, உறவினர்களாக “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” எனக் கூறும் ஆன்மீகப் பார்வை உலகில் தமிழ் இனத்திற்கு மட்டுமே இருக்கிறது என்பதை, உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாமல் தமிழ் மொழியில் மட்டும் இருக்கும் “தமிழர் ஆன்மவியல்” உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
தமிழ் மொழியில் மட்டுமே வளர்ந்திருக்கும் ஆன்மவியல்
மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியே ஆன்மவியல் ஆகும். அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் உலகில் உள்ள மற்ற மொழிகளிலும் இருக்கின்றன. இந்த மூன்றற்கும் மணிமுடியாகத் திகழும் ஆன்மவியல், தமிழ்மொழியில் மட்டுமே வளர்ந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.
ஆறாவது அறிவையுடைய மனிதன் மற்ற உயிரினங்களை ஆளும் ஆட்சிக்குரியவனாக இருக்கின்றான். இந்த ஆட்சி இப்பேரண்டத்தை ஆளும் இறைவனுடைய ஆட்சியின் ஓர் அங்கமாக இருக்கின்றது. இதனால் மனிதன் இறைவனின் ஒரு பகுதியாக, இறைவனின் மகனாக இருக்கின்றான். இதனால் மற்ற உயிரினங்களைக் கொலை செய்வதும் மனிதனைக் கொலை செய்வதும் சமமாகாது. ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைக் கொண்டுள்ள, இறைவனின் மகனாக விளங்கும் மனிதனின் சிறப்பைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியலை அறிந்தவர்கள் மற்றவர்களைக் கொலை செய்ய மாட்டார்கள். மற்றவர்களைத் தற்கொலைக்குத் தூண்டவும் மாட்டார்கள்.
வன்முறைத் தற்கொலையும் சாத்வீகத் தற்கொலையும்
![]() |
தன்னுயிர் துறந்த திலீபன் |
தன் உயிரை இழக்கத் துணியாதவனால் அடுத்தவர்களைக் கொலை செய்யும் போரில் ஈடுபட இயலாது. ஆகவே, மற்றவர்களைக் கொலை செய்யும் போரில் ஈடுபடல் வன்முறைத் தற்கொலையாக மாறுகிறது. தன்னைத் தானே கொலை செய்து கொள்ளுதல் சாத்வீகத் தற்கொலையாக அமைகிறது.
இரண்டு நோக்கங்களும் ஒன்றே! அது எதிரியை வெற்றி கொள்ளுதல்.
முத்துக்குமாரும் திலீபனும்
முத்துக்குமாரின் முயற்சி தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்துள்ள ஒன்று.
திலீபன் மரணமும் இத்தகையதே. சாத்வீகத் தற்கொலை இகழப்படும்பொழுது அது போர் செய்யும் வன்முறைத் தற்கொலையாக மாற்றம் பெறுகிறது.
இந்த வளர்ச்சி நிலையைத் தமிழ் ஈழ வரலாறு உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
ஆகவே, போர் ஈழத்தமிழர்கள் மேல் புகுத்தப்பட்ட ஒன்றே தவிர, அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று அன்று.
முதலில் ஈழப் போராட்ட வரலாற்றைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
- அடுத்த பதிவில் பார்ப்போம்.
(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
0 கருத்துகள்:
Post a Comment