3.3.11

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு என்ன? – 2

நியாயத்தைக் கூற இடமில்லை
“நியாயமில்லாமல் நசுக்கப்படுகின்றோம், அழிக்கப்படுகின்றோம்; நம்முடைய நியாயத்தை எடுத்துக் கூற நமக்கு இடமில்லை” என்னும் உணர்வு மேலோங்கும்போது, அவன் தன் மீது புகுத்தப்பட்டுள்ள அநியாயத்தை எதிர்த்து, தன்னை அழித்துக் கொண்டாவது நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்னும் நிலையில் அவன் பயங்கரவாதியாக  மாறுகின்றான்.  இதனால் உலகம் முழுவதும் துன்பப்படுகின்றது.
“அநியாயமாக நசுக்கப்படுகின்றோம்” என்னும் உணர்வுடையவர்கள், தங்கள் நியாயத்தை எடுத்துக் கூறுவதற்கும் நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய இடம் இருக்குமானால், அங்கே சென்று முறையிட்டு, நியாயத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வழி ஏற்படும்.
இரண்டு நாடுகள் சேர்ந்து, அந்த இரண்டு நாடுகளிலும் வசிக்கும் சிறுபான்மை மக்களை நசுக்கி, அழிக்கத் தொடங்கும்போது, பொது மக்கள் தங்கள் பக்கம் நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கு, நாடுகளின் எல்லையைக் கடந்த உலகப் பொது நீதிமன்றம் இதுவரை உலகில் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் சிறுபான்மையினர் நசுக்கப்பட்டு, அழிக்கப்படும்பொழுது தங்களுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லக்கூடிய நீதிமன்றம் இல்லாத காரணத்தால், நியாயத்திற்குப் புறம்பாகப் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பயங்கரவாதிகள் உருவாகின்றார்கள்.  உலகில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது.

உலக நீதிமன்றம் இல்லை
இன்றைய உலகில் பெரும்பகுதியான நாடுகளில் மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  ஒவ்வொரு நாட்டிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் எல்லையைக் கடந்து, உலக மக்கள் அனைவருக்கும் சேர்த்து, உலக மக்களாட்சி உருவாகாத காரணத்தால், உலக நீதிமன்றம் அமையவில்லை.
இதனால் வலியவர்கள் எளியவர்களை நசுக்கவும் அழிக்கவும் தொடங்கும்போது அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல வழியில்லாமல் தற்கொலைப் படையாக மாறிவிடுகின்றனர்.
உலக மக்களாட்சி வேண்டும்
உலக மக்களாட்சி உருவாகி, உலக நீதிமன்றம் உருவாகும்போது, தற்கொலைப்படைகள் உருவாக வேண்டிய அவசியமில்லாமல் போய் விடுகின்றது.  பயங்கரவாதங்கள் மறைந்து விடுகின்றன.  உலக மக்கள் அனைவரும் அன்பும் ஐக்கியமுமாக வாழ வழி ஏற்படுகின்றது.

உலக நீதிமன்றம் உருவாக, உலக மக்களாட்சி வர வேண்டும். 

 (உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment