மேலை நாடுகளின் பிடியில் இருக்கும் இன்றைய அறிவியல் உயிரினங்களின் உடலை மட்டுமே ஆராய்வதாகவும் உயிரை அறியாததாகவும் இருக்கிறது.
![]() |
தார்வின்: அறிவியலா? |
தார்வினின் படிநிலை வளர்ச்சிக் கொள்கையில் உடலைப் பற்றிய ஆராய்ச்சியே இடம் பெற்றுள்ளது. ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரின் வளர்ச்சிப் படிநிலைகள் ஆராயப்படவில்லை.
இதனால், உடலளவில் ஒத்த தோற்றமளிக்கும் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமையை மட்டும் வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்னும் ஊகத்தைத் தார்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
இது ஊகமே தவிர, அறிவியல் உண்மை ஆகாது. ஏனெனில், ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரினங்களின் உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளைத் தார்வின் ஆராய்ந்திருந்தால் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்கினமாகிய குரங்கிற்கும் ஆறாவது அறிவுமுடைய மனிதனுக்கும் உள்ள தெளிவான வேற்றுமையை அவரால் புரிந்துகொண்டிருக்க முடியும்.
மேலும் தார்வினின் படிநிலை வளர்ச்சிக் கொள்கை அறிவியல் அடிப்படையில் ஆனது என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய அறிவியலாளர்களிடத்தில், உயிரைப் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை வளரவில்லை என்பது நோக்கத்தக்கது.
எவ்வாறென்றால், ‘உயிர்’ என்பது என்ன என்று இன்றைய அறிவியலாளரிடம் விளக்கம் கேட்டால், அவர்களிடத்தில் விளக்கம் இல்லை.
அறிவியலாளர் எந்த விளக்கம் கொடுத்தாலும் இளைஞன் ஒருவன் உடலும் உயிரும் இணைந்ததே உயிரினம்; அப்படியானால்
- உடலுடன் உயிர் எப்போது இணைந்தது?
- எவ்வாறு இணைந்தது?
- உடலை விட்டு நீங்கும் உயிர் எங்கே செல்கிறது?
என்று கேட்கும் கேள்விகளுக்கு அறிவியலாளரிடத்தில் விடைகள் இல்லை.
மேலும் உடலும் உயிரும் இணைந்த முதல் உயிரினம் எவ்வாறு தோன்றியது? என்னும் கேள்விக்கு ஊகத்தின் அடிப்படையிலேயே அறிவியலாளர் விளக்கம் கொடுக்கின்றனர்.
“உயிரற்ற பொருள்களின் இணைப்பினால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.
![]() |
அறிவியல் இல்லை! |
இன்று நம்மிடம் இருக்கும் உயிரற்ற பொருள்களில் எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த அளவில் எந்தெந்தச் சூழ்நிலைகளில் இணைத்தால் ஓர் உயிரினத்தை உருவாக்கிக் காட்ட முடியுமோ அவ்வாறு உருவாக்கிக் காட்டினால், உயிர் என்று தனியாக ஒன்றும் இல்லை என்றும் உயிரற்ற பொருள்களின் இணைப்பினால் முதல் உயிரினம் தோன்றிற்று என்றும் அறிவியலாளர் கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லாமல், ஆறறிவுடைய அறிவியலாளர்களாலும் உயிரற்ற பொருள்களில் இருந்து உயிரை உருவாக்க முடியாதென்றால், உயிரற்ற பொருள்கள் தாமாக உயிரை உருவாக்கிக் கொண்டன என்று அறிவியலாளர் கூறுவது அறிவியல் என்னும் பெயருக்குப் பொருந்தாத ஒன்று ஆகுமல்லவா?
அறிவியலுக்குப் புறம்பான இக்கூற்றை, அறிவியல் எனக் கூறுவது அறிவியலைத் தங்கள் விருப்பப்படிப் பயன்படுத்தும் ஆதிக்கவாதிகளின் ஆதிக்கத் திணிப்பாக இருக்க முடியுமே தவிர, அறிவியலுக்கு ஏற்றதாக இருக்க முடியாது.
“உயிரினத்தை ஆறறிவு படைத்த மனிதனாலும் உருவாக்கிக் காட்ட இயலவில்லை” என்றும்
“உயிரினத்தின் தோற்றம் பற்றி ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றும்
“இந்த ஆய்வு இன்னமும் நிறைவு பெறவில்லை” என்றும்
அறிவியலாளர் அறிவித்தால் இது அறிவியலுக்குப் பொருத்தமான கூற்று ஆகும்.
0 கருத்துகள்:
Post a Comment