17.6.11

நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும்…. - அருட்சகோதரி எழிலரசி


காட்டில் வசித்து வந்த நரி ஒருநாள் தன் இரையைத் தேடி நீண்ட தொலைவு சென்றது.  அங்கே மக்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு அருகே ஒரு கட்டடத்திற்கு வர்ணம் பூசுவதற்காகத் தொட்டியில் வர்ணம் கரைத்து வைக்கப்பட்டிருந்தது.  தொட்டியின் மீது ஏறி அதனை உற்றுப் பார்த்த நரி தவறுதலாகத் தொட்டிக்குள் விழுந்தது.  நரி வெளியே வந்த போது அதன் நிறம் மாறிப் போய் இருந்தது.  மீண்டும் நரி காட்டுக்குள் சென்ற போது மற்ற விலங்குகள், ஏதோ புதிய மிருகம் வந்திருக்கிறது எனப் பயந்து ஓடின.  இதைக் கண்ட நரிக்குப் பெருமையாக இருந்தது.  அதற்கு ஆணவம் தலைக்கு ஏறியது.  மற்ற விலங்குகள் நம்மைக் கண்டு பயப்படுகின்றன.  இனி நமக்கு யோகம் தான்.  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாமே இந்தக் காட்டிற்கு ராஜாவாகி விடலாம் எனக் கனவு கண்டது.  மற்ற விலங்குகள் சிரமப்பட்டு வேட்டையாடித் தேடிய உணவை தன் அதிகாரத்தால் கவர்ந்து உண்டு சோம்பேறித்தனமாக வாழ்வைக் கழித்தது.

பிறவிக்குணம் தன்னையறியாமல் வெளிப்படும் அல்லவா?  நரியும் தன்னையறியாமல் ஒரு நாள் ஊளையிட்டு விட்டது.  நரியின் முகத்திரை கிழிந்தது.  மற்ற விலங்குகளுக்கு இத்தனை நாட்களும் தங்களை ஏமாற்றியது நரி தான் என்பது புரிந்து விட்டது.

இது போதாது என்று அன்று, மேகம் கருத்து மழை பொழிய ஆரம்பித்தது.  அவ்வளவுதான் அந்த மழையில் நரியின் சாயம் முற்றிலும் கரைந்து அதன் உண்மை உருவம் வெளிப்பட்டது.  இத்தனை நாட்களும் தன்னைவிடப் பெரிய விலங்குகளை எல்லாம் தன் புதிய நிறத்தால் ஏமாற்றி வந்த நரியின் கதி அதோ கதியானது.

இந்த நரியின் கதையைப் போன்றது தான் வந்தேறிகளான ஆரியரின் கதையும்.

குமரிக்கண்டத்தில் தோன்றிய மாந்த இனம் படிப்படியாகப் பூவுலகம் முழுவதும் பரவிச் சென்று குடியேறியது.  குளிர்ப்பகுதியில் சென்று குடியேறிய மனிதன் தோல் நிறம் வெளுத்து வெள்ளை நிறம் பெற்றான்.  அவன் மீண்டும் தமிழ் நிலத்திற்கு வந்த போது தன்னைக் கண்டு வியந்த மாந்தர் நடுவில் தன்னை மிக உயர்ந்தவனாகக் காட்டிக்கொண்டான்.

ஆரியர் இந்நிலையைத் தமக்கு நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள பல நரித் தந்திரங்களை மேற்கொண்டனர்.  தமிழ் இனத்தை அடிமைப்படுத்தினர்.  தமிழ் மொழியையும் இலக்கியங்களையும் பண்பாட்டையும் அழித்தும் திரித்தும் சிதைத்தும் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர்.  தொன்மை வாய்ந்த நம் தமிழர் சமயத்தைப் பொய்யான கட்டுக்கதைகளாலும் வெற்றுப் புனைந்துரைகளாலும் உருவிழக்கச் செய்துள்ளனர்.  நம் சமயக் கொள்கைகளுக்குள் சாதிப் பாகுபாடுகளைப் புகுத்தித் தங்களை உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொண்டு தமிழினத்தை அடிமைப்படுத்தி நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்த நினைத்தனர்.  இக்கதையினை உதாரணம் காட்டி மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் தமது ‘தமிழர் மதம்’ என்ற நூலில் ‘பிராமணன் நிலத்தேவனா?’ என்ற தலைப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“கதை(யில்) வரும் நீலநரி, தான் நீலத்தொட்டிக்குள் விழுந்து நீலநிறம் பெற்றதனாயிலேயே, அரிமாவும் வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மா விலங்குகளையும் ஏமாற்றி அடக்கியாண்டது போன்றே, வேதப் பிராமணனும் குளிர்நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன் வெண்ணிறத்தைத் துணை கொண்டு தான் நிலத்தேவன் என்று தமிழரையும் திராவிடரையும் ஏமாற்றி அடக்கியாண்டார்.  உலக வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இல்லாத பண்டைக்காலத்தில் பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும் கொடை மடமுங் கொண்ட மூவேந்தரையும் பலவகையில் வயப்படுத்தி அவர் வாயிலாகப் பொதுமக்களிடைப் பிராமணியத்தைப் புகுத்தினர் ஆரியர்..”

“ஆரியர் வருமுன்பே, தனித்தமிழ் மறைநூல்களும் மந்திர நூல்களும் குமரிநாட்டில் தோன்றியிருந்தன.”
(தமிழர் மதம் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்)
                                                                                                             -தொடரும்

(கட்டுரை: தமிழர் சமயம் சூன் 2011 இதழில் வெளியானது.  மொழி நடை மாற்றாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment