நீங்கள் தமிழரா?
தெலுங்கு நாட்டைத்
தெலுங்கர்கள் ஆளுகிறார்கள். மலையாள நாட்டை
மலையாளிகள் ஆளுகிறார்கள். கன்னட நாட்டைக் கன்னடர்கள்
ஆளுகிறார்கள். ஆனால்
தமிழ் நாட்டைத்
தமிழர் அல்லாத அந்நியர் ஆளுவது ஏன்?
 |
தமிழரல்லாத அந்நியர் |
இப்பொழுது தமிழ்
நாட்டை, தமிழரல்லாத கன்னடப் பிராமணப் பெண்மணி செல்வி ஜெயலலிதா ஆளுகின்றார்.
எதிர்க்கட்சித்
தலைவராக தெலுங்கராகிய விஜயகாந்த் இருக்கின்றார்.
தெலுங்கராகிய
விஜயகாந்துக்கு அடுத்த நிலையில், தெலுங்கர் எனக் கூறப்படுவதை மறுக்காத கலைஞர் இருக்கின்றார்.
கலைஞர் கட்சிக்கு
அடுத்த நிலையில் தெலுங்கராகிய வைகோ இருக்கின்றார்.
ஆனால், தமிழ்
நாட்டு ஆட்சியில் தமிழருக்கு இடம் இல்லையே, ஏன்? தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து
தமிழர் நிலங்களையும் வீடுகளையும் கைப்பற்றி, தமிழர்களை நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட
அந்நியர், தமிழ் நாட்டில் சகல வசதிகளோடும் தங்கி இருக்கின்றனர்.
நடப்பது மக்கள்
ஆட்சி. அதிலும் தமிழ் நாட்டைத் தமிழ் மக்களே ஆட்சி செய்யுமாறு இந்திய இறையாண்மை, மொழி
வழி மாநிலமாகப் பிரித்து, தமிழ்நாட்டைத் தமிழ் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறது.
மக்கள் ஆட்சி
நடைபெறும் இந்தியாவில், தமிழ் மக்கள் மிக மிக அதிகமாக வாழுகின்ற தமிழ் நாட்டை தமிழரல்லாத
அந்நியர் ஆளுகின்றார்கள் என்றால் குறை கூறப் பட வேண்டியவர்கள் தமிழ் மக்களே என்பது
வெளிப்படை. இதற்குக் காரணம் என்ன?
தமிழர்களுக்குள்
ஒற்றுமை இல்லை. ஏன் ஒற்றுமை இல்லை? தமிழ் மக்களில் மூன்று பிரிவினரை நாம் பார்க்கின்றோம்.
அப்பிரிவுகள் 1. முன்னேறியவர்கள் 2. பிற்படுத்தப்பட்டவர்கள் 3. தாழ்த்தப்பட்டவர்கள்.
1. தமிழ் இனத்தையும்,
தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் சமயத்தையும் அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தவர்கள், இலங்கையில் அமைச்சர் பதவி வகிக்கும் கருணாவையும்
டக்லஸ் தேவானந்தாவையும் போன்று, தமிழ் இனத்தில் முன்னேறிய பிரிவில் இருக்கின்றார்கள்.
2. இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்னும்
நிலையில் வாழ்ந்த பொது மக்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்றார்கள்.
3. சிங்களர்களை
எதிர்த்துப் போராடியவர்களும் அவர்களைச் சார்ந்தோரும்
இன்று முள்வேலியில் அடைக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்களே, அதைப் போன்று, அந்நியர்களை
எதிர்த்துப் போராடிய பரம்பரையினர் தாழ்த்தப்பட்டவர் பிரிவில் இருக்கின்றார்கள்.
இந்த மூன்று
பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவும், மேலும் பல பிரிவுகளாகிய சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதனால், தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டுவிடாதபடி, அந்நியர்கள், சாதிப் பிரிவுகளைப்
பயன்படுத்தி, தமிழர்களைப் பிளவுபடுத்தி அடக்கி ஆட்சி செய்து வருகின்றார்கள்.
இதனால் காட்டிக்
கொடுத்த பரம்பரையினர் தமிழர்களில் தங்களை மேல் சாதி என்று பெருமை கொள்ளும் இழி நிலையும்,
அந்நியர்களை எதிர்த்த பரம்பரையினர் தமிழர்களில், இழிசாதியினர் என இழிவுபடுத்தப்படும்
கொடுமையும் நடந்து வருகின்றன.
இதைச் சரிப்படுத்தாமல்
தமிழ் இன ஒற்றுமையை உருவாக்க முடியாது. அந்நியர் ஆட்சியை நீக்க முடியாது என்பது தெளிவு.
இந்த சாதி ஏற்றத்தாழ்வுக்
கொள்கை மதத்தின் பெயரால், மக்கள் உள்ளத்தில் புகுத்தப்பட்டுள்ளமையால், மக்களை விடுவிக்க
முயன்ற தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்காரும், பிறப்பால் வரும் சாதியின் பெயரால்
நம்மை இழிவுபடுத்துகின்ற மதத்தை வெறுக்கவும், வேறு மதத்திற்கு மாறவும் கற்றுக் கொடுத்தார்கள்.
இவர்கள் இருவரும்
வாழ்ந்த காலத்தில் ''இந்துத்துவா’’ என்னும் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை வேறு; ''தமிழர்
சமயம்’’ என்னும் இந்து மதம் வேறு என்னும் ஆராய்ச்சிக் கருத்துகள் வெளியே வரவில்லை.
'இந்து மதம்’
என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த மாளிகை. அந்த மாளிகைக்குள் ''இந்துத்துவா’’
என்னும் கொடிய பாம்புகள் குடியேறியுள்ளன. பாம்புகளுக்குப் பயந்து மாளிகையின் மீது கல்லெறிவதோ,
மாளிகையைப் பாம்புகளுக்குக் கொடுத்து விட்டு நாம் வெளியேறுவதோ தேவை இல்லை; பாம்புகளைப்
பிடித்து பாம்புப் பண்ணைக்கோ, அல்லது காட்டிற்கோ அனுப்பிவிட்டு மாளிகையைச் சுத்தப்படுத்தி,
நாம் குடியேறுவதே இன்று அவசியமாகிறது என்பதை அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு
உறுதி செய்து அதற்காகப் போராடி வருகிறது.
'இந்து மதம்’
என்பது தமிழ் இன மக்களின் வேத நூலாகிய 'தமிழ் மறை’ எனப்படும் திருக்குறளின் வழி, தமிழ்நாட்டில்
பக்தி இயக்கமாகத் தோன்றி, சைவம், வைணவம் என்னும் இருபிரிவாக வளர்ந்துள்ள தமிழர் சமயம்
ஆகும். தமிழர் சமயத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான புதுப் பெயரே இந்து
மதம் (Hindu Religion) என்பது வரலாறு.
'இந்துத்துவா’ என்பது ஒரு மதம் அல்ல
என்பதும் ஆரியவர்த்தத்தில் உருவாக்கப்பட்ட சட்ட நூலாகிய மனுநூல் கொள்கை என்பதும், அது
சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையைக் கூறுவது என்பதும், மனுநூல் கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த
புதுப்பெயரே 'இந்துத்துவா’ (Hindutwa) என்பதும் வரலாறு.
ஆகவே, இந்துத்துவாவாகிய
சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குப் பயந்து, தமிழர் சமயமாகிய இந்து மதத்தை வெறுக்கவோ,
கைவிட்டு மதம் மாறுவதோ தேவை இல்லை என்பதும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைவரையும் ஒன்றிணைக்கும்
உலகின் மிகச் சிறந்த தமிழர் ஆன்மவியல் (Soulology) இந்து மதமாகிய தமிழர் சமயத்தைக்
கூறும் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதையும் உணர்ந்து, அதன் சிறப்புகளை உலகம் முழுவதும்
பரப்ப வேண்டும் என்பதும் இப்பொழுது வலியுறுத்தப்படுகிறது.
சிந்து வெளித்
தமிழர்களின் புனிதமான சிவலிங்க வழிபாட்டிலிருந்து தோன்றியவையே உலக மதங்கள் அனைத்தும்
என்பது இப்பொழுது ஆராய்ச்சியில் வெளி வந்துள்ள வரலாற்று உண்மையாகும்.
இதனால் உலக
சமயங்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு பொதுப் பெயராக ''தமிழர் சமயம்’’ என்னும் பெயர்
இருக்கிறது. இதனால் தமிழர் சமயத்தின் அடிப்படைக் கொள்கையாக ''ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’
என்பது விளங்குகிறது. திருமந்திரத்தை எழுதியுள்ள திருமூலரின் இந்த வாக்கை, தந்தை பெரியார்
பேசிய நாத்திகக் கொள்கையிலிருந்து மாறுபட்ட, தமிழராகிய அறிஞர் அண்ணா, தாம் உருவாக்கிய
தி.மு.கவின் அடிப்படை ஆன்மீகக் கொள்கையாக அறிவித்தார்.
தி.மு.க வை
உருவாக்கிய தமிழராகிய அறிஞர் அண்ணா அறிவித்த தமிழர் ஆன்மீகக் கொள்கை, இன்று தமிழரல்லாதார்
தலைமையிலுள்ள திராவிட அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இக் கொள்கைக்குப்
புத்துயிர் கொடுக்க வேண்டிய கடமை தமிழர் ஆன்மீகத்தை அறிந்த தன்மானத் தமிழர்களின் மீது
இருக்கிறது.
''உலகின் முதல்
மொழி தமிழ்’’ என்பதை இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பைபிளின் தொடக்கநூல்
(ஆதி 11: 1-2) விளக்கிக் கொண்டிருக்கிறது.
உலக ஆன்மீகச்
சிந்தனையின் தொகுப்பாக இருக்கும் தமிழர் சமயத்தின் மணிமுடியாக விளங்குவது தமிழர் ஆன்மவியல்.
தமிழர் ஆன்மவியலைக் கூறும் நூல் சிவஞானபோதம். இது உடல், உயிர், ஆன்மா, கடவுள், ஆணவம்
ஆகிய ஐந்தையும் அறிவியல் வழியில் விளக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், ''தமிழர் ஆன்மவியலை
அறியாத நிலையே 'கடவுள் இல்லை’ எனக் கூறுகிறவரின் நிலை’’ என்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது.
மேலும் கடவுளை
அறியாமலும், தம்முடைய நீண்ட வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காமலும் பணம் ஒன்றையே
குறிக்கோளாகக் கொண்டு, அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய உலகிற்கு, தமிழர்
ஆன்மவியலைப் பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.
தமிழ்மொழியின் சிறப்பும் தமிழர் ஆன்மவியலின் சிறப்பும் இன்று மறைந்து கிடக்கின்றன. இவற்றை உலகம் அறிந்து பயன்பெற தமிழர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்பதை உணர வேண்டும்.
- அனைத்துத்
தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு