22.12.10

கல்வி வேறு அறிவு வேறு!


           கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புஸ்தகப் படிப்பையும் குருட்டு உருப்போட்டு பரிட்சைகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  உதாரணமாக ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச்சங்கத்தில் படித்து வித்வான் பரிட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர்கள் என்று சொல்லிவிடமுடியாது.  அவர்கள் ஏதோ ஒரு வித்தையில் அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  அதாவது அலமாரியில் உள்ள புஸ்தகங்களைப் போல் இவர்களும் தங்கள் மனதில் பல விஷயங்களை “பதிய வைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி” என்று தான் சொல்ல வேண்டும். 
           படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.  படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம்.  உதாரணமாக ஒரு பூகோள சாஸ்திரத்தில் எம்.ஏ. (பண்டித) பட்டம் பெற்ற ஒரு உபாத்தியாயர் பிள்ளைகளுக்கு சூரிய சந்திர கிரகணத்தைப் பற்றி வான சாஸ்திரப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது பூமியும் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று சுற்றுவதின் பயனாய் ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகுர்தியும் ஒளியும் மறைவுபடும்.  அதைத்தான் சந்திரகிரகணம் என்றும் சூரிய கிரகணம் என்றும் சொல்வது என்று பாடம் சொல்லிக் கொடுப்பான்.  
              ஆனால் சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ வந்து விட்டால் சூரியன் என்கின்ற ஒரு தேவதையை இராகு, கேது என்கிற தேவதைகள் துன்பப்படுத்துவதாகவும் இது அவர்களுக்கு ஏற்பட்ட சாபத் தீடு என்றும் அதற்காக மக்கள் தோஷ பரிகாரம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு கிரகணம் பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும் விடும்போது ஒரு ஸ்நானமும் மத்தியில் மந்திரங்களும் ஜெபங்களும் செய்வான்.  சாப்பிடாமல் பட்டினியாகவும் இருப்பான். மற்றும் தான் பிறந்த நேர கிரக நட்சத்திரமும் கிரகண நேர கிரக நட்சத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங் கட்டிக்கொண்டு முழுகுவான்.  ஆகவே அவனது படிப்பானது வான சாஸ்திர பரிட்சையில் தேறத்தான் உபயோகப்பட்டதே தவிர அந்த எம். ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்கு சற்றும் பயன்படவே இல்லை. 

(பெரியார் – குடிஅரசு- சொற்பொழிவு-27.07.1930)

PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment