27.12.10

தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே! - 2

முந்தைய பதிவின் (http://meykandar.blogspot.com/2010/12/1.htmlதொடர்ச்சி

இத்துடன் தந்தை பெரியார் நிறுத்தவில்லை.  அவர் இன்னொரு சொற்பொழிவில் பேசியதையும் படியுங்கள்:

“நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும் என்னைப் பலர் நாஸ்தீகர் என்று சொல்லுகிறார்கள் என்றும் நான் நாஸ்தீகன் அல்லவென்றும் எனக்காகப் பரிந்து பேசினார்கள்.  அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு செலுத்துகிறேன்.  ஆயினும் என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன் தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.  நாஸ்தீகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது.  அதிலும், சமதர்மக் கொள்கையை பரப்ப வேண்டுமானால் நாஸ்தீகத்தினால் தான் முடியும்.  நாஸ்தீகமென்பதே சமதர்மம் என்று பெயர்.  அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.  பெளத்தரையும் நாஸ்தீகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால் தான்.  நாஸ்தீகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல.  சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்தீகம் என்று தான் யதாபிரியர்கள் சொல்லித் திரிவார்கள்.  எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்து தான் நாஸ்தீகம் முளைக்கின்றது.  கிறிஸ்துவையும் மகமது நபியையும் கூட நாஸ்தீகர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும் சீர்திருத்தமும் தான் காரணமாகும்.  துருக்கியில் பாஷாவும் ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்தீகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம்.  ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும் பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும் கடவுள் கட்டளை என்றும் கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமே தான் யதாப்பிரியர்கள் சொல்லுகிறார்கள்.  ஆகவே நாம் இப்போது எதெதை மாற்ற வேண்டுமென்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும். 

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில் மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால் அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தேதான் ஆக வேண்டும்.  எல்லா மதங்களும் மதக் கொள்கைகளும் கடவுளாலோ அவதாரங்களாலோ கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லும்போது அப்படிச் சொல்பவன் அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களை அலட்சியம் செய்தவனே யாகின்றார்.  அதனால்தான் கிறிஸ்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும் மகமதியரல்லாதவர் காபர் என்றும் இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகிறது. 

அன்றியும் கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும் கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?
 
ஜாதி, உயர்வு தாழ்வு, செல்வம், தரித்திரம், எஜமான், அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும் கர்மமும் தான் காரணம் என்று சொல்லுவதானால் பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?  கடவுளையும் கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்?  மேடும் பள்ளமும் கடவுள் செயலானால் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விறோதமான காரியமாகும்.  மனிதனுக்கு முகத்தில் தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால் சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு  நாஸ்திகமான காரியமேயாகும்.  அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும்.  பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும்.  ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது “கர்மத்திற்காக” பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும்.  அதாவது கடவுளை நம்பாத, கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும்.  இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவரும் இருக்க முடியாது.  ஆதலால் நம்மைப் பொருத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும்.” 
(குடி அரசு – சொற்பொழிவு – 07.09.1930)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment