7.11.10

இல்லது என் இல்லவள் மாண்பானால்?


அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச்சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.  பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.  புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு.  தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்?  ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமானதாகும்.  தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும்.  அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது. 

            தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும்.  பத்திரிகைகளைப் படிக்க வேண்டும்.  படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும். 

            வீட்டு வேலை செய்வது தான் தங்கள் கடமை என்பதை மறந்துவிட வேண்டும்.  புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.  இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்தி அவர்களுக்கு தக்க பயிர்ச்சி கொடுக்க வேண்டும். 

(பெரியார் 10.07.1930 இல் விருதுநகர் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி – 13.07.1930 நாளைய குடியரசு இதழில் வெளியானது)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment