Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

25.6.11

திருநீறா? சிலுவையா? - 6


திருநீறும் திருமண்ணும்
சைவர்கள் திருநீற்றால் தங்கள் அடையாளத்தையும் வைணவர்கள் திருமண்ணால் தங்கள் அடையாளத்தையும் தங்கள் நெற்றிகளில் இடுகின்றார்கள்.   சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னரே திருநீற்றிலிருந்து திருமண் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.  மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு மூன்றையும் திருநீறு விளக்கி நின்ற நிலையை முன்னர்ப் பார்த்தோம்.  

இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்னர் செங்கிடாரி கொல்லப்பட்டு, அதனுடைய தோல், தசை, இரத்தம் ஆகியவை சாணியுடன் சுட்டெரிக்கப்பட்டு திருநீறு தயாரிக்கப்பட்டது.  இது வெறும் நீறு அன்று.  சுத்திகரிக்கும் நீறு.  அதனால் திருநீறு ஆகிறது.  இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், தயாரிக்கப்படும் திருநீறு, சுத்திகரிக்கப் பயன்படும் திருநீறு அன்று.  

இயேசு கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் அறிவிக்கும் அடையாளமாக, பின்னர்த் திருநீறு விளங்குகிறது.  ஆகையால் கிறித்தவத்தில் திருநீறு தயாரிக்கப்படுவதற்குக் கிடாரி கொல்லப்படவோ, தோல், தசை, இரத்தம் எரிக்கப்படவோ அவசியம் இல்லை.  இவை எல்லாம் கிறித்துவுக்குள் நிறைவேறிவிட்டன.  அதனால் திருநீறு தயாரிக்க, கிடாரியின் சாணி எரிக்கப்பட்டாலே போதுமானது.  

சாணி எரிக்கப்பட்டால் அது நீறு ஆகுமே தவிர திருநீறாக எவ்வாறு ஆகும் என்று எண்ணலாம்.  கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் குறிக்கும் அடையாளமாக நெற்றியில் இடப்படுகின்ற காரணத்தால் அது வெறும் நீறு அன்று.  திருநீறாக மாறிவிடுகிறது.  

இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் கடவுளின்
1.   தந்தை நிலை
2.   மகன் நிலை
3.   பரிசுத்த ஆவிநிலை
ஆகிய மூன்று நிலைகளையும் உலகம் அறியும் வகை ஏற்பட்டது.  இந்த மூன்று நிலைகளையும் விளக்குவதற்காகத் திருநீற்றால் மூன்று கோடுகள் இடப்படுகின்றன.   

திருநீறு,சந்தனம்,குங்குமம்   
இந்த மூன்று நிலைகளில், “மகன் மரத்தில் இரத்தம் சிந்தியதால் பாவ மன்னிப்பு ஏற்பட்டது” என்பதை விளக்க, மூன்று கோடுகளால் மகனைக் குறிக்கும் மையக் கோட்டின் மத்தியில் “மரத்தின் வழியாக இரத்தம் சிந்தினார்” என்பதைத் தெரிவிக்க, சந்தன மரத்தினாலாகிய சந்தனப் பொட்டும், அப்பொட்டின் மத்தியில் இரத்தத்தைக் குறிக்க சிவப்புக் குங்குமப் பொட்டும் இடப்பட்டு, இயேசு கிறித்துவின் நற்செய்தி முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது.  இது சைவத்தின் நிலை.  


சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னர் திருநீற்றிலிருந்து திருமண் அணியும் நிலை உருவாயிற்று.  அத்துடன் “இரத்தம் சிந்தி மீட்டெடுத்தார்” என்பதை விளக்க, “குங்குமப்பொட்டு வைப்பதை விட இரத்தம் வடிவதைக் காட்ட வேண்டும்” என்ற நிலை உருவாக்கப்பட்டது.  அதனால் நெற்றியில் படுக்கையாக இடப்பட்ட மூன்று கோடுகள் மாற்றப்பட்டு செங்குத்தாக மேலிருந்து கீழாக இடப்பட்டன.  மையக்கோடு இரத்தம் சிந்தும் கடவுளின் மகனாகக் காட்ட சிவப்புக் கோடாக மாற்றப்பட்டது.  மேலிருந்து இரத்தம் சிந்தப்பட்டதைக் காட்ட சிவப்புக் கோடு மேலே ஒடுக்கமாகவும் கீழே வரவர அகலமாகவும் அமைக்கப்பட்டது.  

அறிய இயலா நிலை
கிறித்தவத்தின் நற்செய்தியைத் தெளிவாக  வெளிக்காட்டும் இந்த அடையாளங்களைச் சைவப் பெருமக்களும் வைணவப் பெருமக்களும் தினந்தோறும் தங்கள் நெற்றிகளில் தவறாது இட்டுக்கொண்ட போதிலும், ஏன் இவ்வாறு அணிகின்றோம் என்று அவர்கள் அறிய இயலாத நிலை ஏற்பட்டது வருந்தத்தக்க ஒன்றாகும். 

பைபிளும் நெற்றியில் அடையாளமிடுதலும்
ஐரோப்பிய வழிக்கிறித்தவர்கள் நெற்றியில் அடையாளம் இடுவதில்லை.  தோமா வழிக்கிறித்தவர்களாகிய சைவர்களும் வைணவர்களும் நெற்றியில் அடையாளம் இடுகின்றார்கள்.  இது பைபிளுக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகின்றது. 
-    தொடரும்
(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?” என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

திருநீறா? சிலுவையா? – 5


குறிப்பு: பின்னூட்டமிடுவோர் இத்தொடரின் முதல் நான்கு பதிவுகளையும் படித்து விட்டுப் பின்னூட்டமிடுங்கள். தொடர் இன்னும் விரியும்..
சைவ வைணவ சமயங்கள் என்பன இரண்டு தனித்தனிச் சமயங்கள் அல்ல.  சைவத்தின் கிளையே வைணவம் ஆகும்.  அன்பின் மறுபெயர் ‘சிவன்’ என்பதாகும்.  சைவம் என்பது சிவனை அடிப்படையாகக் கொண்டது.  சிவபெருமானின் உடலின் இடப்பாகத்தைப் பெண்ணாகக் கூறினால் அது சைவம்.  அதையே ஆணாக கூறினால் அது வைணவம். 

கிறித்தவத்தில், தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்ற மூவொரு கடவுள் கோட்பாட்டில், பரிசுத்த ஆவியைப் பெண்ணாகக் கொண்டு சைவம் பிறந்தது;  பரிசுத்த ஆவியை ஆணாகக் கொண்டு வைணவம் பிறந்தது.  இதைப் பற்றி மேலும் விளக்கம் வேண்டுவோர் “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வு” என்னும் ஆய்வு நூலை நோக்குக. 

பலிபீடம்
பைபிளில் யாக்கோபு நாட்டிய நினைவுத்தூண், சைவத்தில் சிவலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.  கிறித்துவிற்கு முற்பட்டது சிவலிங்க வழிபாடு.   கிறித்துவிற்கு முற்பட்ட சிவலிங்க வழிபாட்டில் பலி இருந்தது.  யாக்கோபு பலியிட்டான்.  கிறித்துவிற்குப் பிற்பட்டது சிவக்குடும்ப வழிபாடு.  சிவக்குடும்ப வழிபாட்டில் பலிபீடம் இருக்கிறது.  ஆனால் பலி இல்லை.  காரணம் பலி இயேசு கிறித்துவினால் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதாலேயேயாகும். 

தந்தை, பரிசுத்த ஆவி, மகன் ஆகிய “மூவொரு கடவுள்” என்னும் கிறித்தவ இறையியல் கொள்கை,
1.    திருக்குறளில் கடவுள், வான், நீத்தார் ஆகிய “இயல்புடைய மூவர்” என்றும்
சோமாஸ்கந்தர்

2.    சிவக்குடும்ப வழிபாட்டின் ஒரு பிரிவாகிய சைவத்தில் அப்பன், அம்மை, மகன் ஆகிய “சோமாஸ்கந்தர்” என்றும்

மும்மூர்த்தி

3.    சிவக் குடும்ப வழிபாட்டின் மற்றொரு பிரிவாகிய வைணவத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய “மும்மூர்த்தி” என்றும்
குறிக்கப்படுகின்றது.  சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் நெற்றியில் அடையாளம் இடும் மரபு இருந்து வருகிறது. 
-       தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?” என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

22.3.11

திருநீறா? சிலுவையா? - 4


திருநீற்றைப் பயன்படுத்தும் திருச்சபை
ஐரோப்பியர் பிடியில் சிக்காமலும் சிலுவை அடையாளத்தைப் பயன்படுத்தாமலும் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உலகில் பரவி, திருநீற்றை அடையாளமாகப் பயன்படுத்தி வரும் கிறித்துவின் திருச்சபைப் பிரிவினர் உலகில் இருக்கின்றார்களா?  என்று தேடிப் பார்க்க வேண்டியது இப்பொழுது அவசியமாகிறது.

தூய தோமா
இயேசுகிறித்துவின் மாணவர்களில் மிக நீண்ட தூரம் சென்று கிறித்துவின் நற்செய்தியை அறிவித்த பெருமை புனித தோமையருக்கும் மட்டுமே இருக்கின்றது.  அவர் கி.பி. 52இல் தமிழகம் வந்து நற்செய்தியை அறிவித்து கி.பி. 72இல் மைலாப்பூரில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார் என்பது கிறித்துவத் திருச்சபை வரலாற்றின் ஒரு பகுதி.

அவர் அறிவித்த நற்செய்தியின் பயனாக உருவானதே திருக்குறள் என்பதும் திருக்குறளின் அடிப்படையில், பக்தி இயக்கம் உருவாகி சைவ, வைணவ சமயங்கள் எழுந்தன என்பதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய உண்மைகளாகும்.

சிதைக்கப்பட்டு புதையுண்டு கிடப்பது
தோமா வழிக் கிறித்தவத்தின் பிரிவுகளான சைவ, வைணவ சமயங்கள், பின்னர் தீ வழிபாட்டையுடைய ஆரியப் பிராமணர்களின் பிடியில் அகப்பட்டு ஆரியர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையால் சிதைக்கப்பட்டு இன்று ‘இந்து மதம்’ என்ற கோட்டைக்குள் அடையாளம் காண இயலாநிலையில் புதையுண்டு கிடக்கின்றன.  புதையுண்டு கிடக்கும் அரிய உண்மைகளைத் தோண்டித் தோண்டி வெளியே கொண்டு வர வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன.  இந்த நிலையில் சைவ, வைணவ சமயங்களில் புதைந்து கிடக்கும் திருநீறு பற்றிய வரலாற்றை நோக்குவோம்.

-                                                                                                                                                                                            - தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

21.3.11

எங்களை அர்ச்சகர் பணி செய்யக்கூடாது என்று தடுக்க இவர்கள் யார்? - ஒரு தமிழ் அர்ச்சகரின் ஆவேசம்...


'தமிழராகிய நாங்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்த பின்னரும் அர்ச்சகராய்ப் பணியாற்ற பிராமணர்கள் தடை செய்வதால். பெரியார் வழியில் சாதிகளைக் கடந்து தமிழராய் ஒன்று கூடி, பிராமண ஆதிக்கத்தை முறியடிப்போம்’

என்ற தமிழ் அர்ச்சகர் சு, சீனிவாசனின் துடிப்புமிகு ஆதங்கம் நம் ஆசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்திற்குத் தெரிய வந்தது. 22-7-2010 நாளிட்ட புரட்சிப் பெரியார் முழக்கம் என்னும் பெரியார் திராவிடர் கழக வார ஏட்டில் இச் செய்தியைப் படித்தார்; படித்தவுடன் தன்மானத் தமிழ் அர்ச்சகரின் இந்த ஆதங்கத்தை அறிந்து பெரு மகிழ்வு கொண்டார் ஆசிரியர். அடுத்த நாள் காலையிலேயே விடிந்தும் விடியாததுமாகப் புறப்பட்டு விட்டார் அந்த அர்ச்சகரைக் காண. தமிழின ஆன்மீக விடுதலைப் பணியில் ஆர்வம் கொண்டவரான அன்பரசன் என்ற நண்பரும் ஆசிரியருடன் சென்றார்.

ஆசிரியரும் அருச்சகர் சு.சீனிவாசனும்
சென்னையிலிருந்து புறப்பட்டு இராணிப்பேட்டை சென்றடைந்தனர்; கோவில் கோவிலாகச் சென்றுஅவர்இருக்கும் இடத்தைத் தேடியலைந்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தார் ஆசிரியர். தான் பெரியார் கூட்டத்தில் பேசியதைப் படித்துவிட்டு    சென்னை அயன்புரத்திலிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் பயணித்துத் தன்னைப் பார்க்க வந்திருக்கின்றாரே ஆசிரியர் என்பதால் மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார் அந்த அர்ச்சகர். ஏற்கெனவே ஆசிரியர் தமிழர்களின் கருவறை வழிபாட்டுக்காகப் போராடி வருவதை நாம் அறிவோம்.

தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, தமிழர்களால் கட்டப்பட்ட, தமிழர் சமயக் கோவில்களாகிய சைவ, வைணவக் கோவில்களின்  கருவறை சென்று தமிழ் மொழியில் வழிபட. தமிழர்களுக்கு உரிமையில்லையா?

ஏன் உரிமையில்லை? ''தமிழ் இனம் கீழான நீச இனம்”, ''தமிழ் மொழி கீழான நீச மொழி”
என்கின்றனர் ஆரிய பிராமணர்.

தமிழர் சமயக் கோவில் கருவறைகளில் வழிபாடு செய்ய  பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையா? பிராமணரல்லாத தமிழருக்கு அந்த உரிமை கிடையாதா? 200க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தமிழ் அர்ச்சகர்கள் பிராமணரல்லாத தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே நடுத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனரே.

ஏன்?
என்ற கேள்வி கேட்டுப் போராடி வருவதால் இது தொடர்பான வெளியீடுகளை எல்லாம்  அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆர்வமுடன் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றைப் படித்துவிட்டு ஆசிரியருக்கு உருக்கமான கடிதம் எழுதியதோடு நேரில் வந்து பார்த்தார். நேரில் அவர் தன் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் கொட்டி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆதங்கப் பேட்டி இதோ….
- முனைவர் தெ.தேவகலா

வணக்கம்.  என் பெயர் சு. சீனிவாசன். நான் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா மின்னூர் கிராமத்தைச் சார்ந்தவன். தமிழ்நாடு அரசால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் மூலமாகச் சட்டம் இயற்றப்பட்டதால் அதன் மூலமாகத் தான் அர்ச்சகர் பயிற்சி பயின்றோம். தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையிலே சைவ சமயம் ஏற்றிப் போற்றும் திருவண்ணாமலையிலே இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்தேன்.

நாங்கள் மொத்தம் 40 பேர் பயின்றோம்.  திருவண்ணாமலையில் அந்தப் பாடங்களையும் வேதங்களையும் கற்றுக் கொடுப்பதற்கு. பிராமண ஆசிரியர்கள் யாரும் முன்வரவில்லை. எந்த ஆசிரியரும் வராத காரணத்தால் ஒரு மூன்று மாத காலம் எங்களுக்கு ஏற்கனவே அர்ச்சகர்களாக இருந்த மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

அதாவது, எங்களுக்கு முன்பாகவே பயிற்சி பெற்று அர்ச்சகராகவே பணி புரிந்திருக்கிறார்கள். பிராமணர் அல்லாதவர்கள் கூட புரோகிதம் அதாவது  வாழ்வியல் சடங்குகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எங்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் யாரும் முன்வரவில்லை. தமிழாசிரியர்கள் மட்டும் வந்தார்கள். பிராமணர்கள் யாரும் முன்வரவில்லை; இறுதியாக  ஒரு மூன்று மாத காலம் மாணவர்களே எங்களுக்குப் பாடம் நடத்தினார்கள்.

புரோகிதம் செய்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட தமிழ்ச் சாதியினர் ஆசாரியர்கள், மர வேலை செய்பவர்கள் நிறைய பயின்றிருக்கிறார்கள். அர்ச்சகராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எங்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. அதன்படி நாங்கள் பயின்று கொண்டிருக்கும்போது சேலத்திலிருந்து ஓர் ஆசிரியர் ராமகிருஷ்ண ஜீமான். பிராமணராய் இருப்பினும் உலகம் முழுவதும் தன்னுடைய வேதத்தைப் பாடமாகச் சொல்லி கொடுக்கிறவர். 80 வயதுக்கு மேல் இருக்கும். அவர் எங்கள் ஆசிரியரானார்.

அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆன்மீகத்துக்குள் தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் ஒரு மந்திரம் சொன்னால் அது தெளிவாகவும் ஓசையுடனும் கேட்கும். அவர் ஒவ்வொன்றையும் சொல்லும்போது அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். மிகச் சிறந்த ஆசிரியர். அவர் பாடம் சொல்லிக் கொடுக்க, அதை அந்த 40 மாணவர்கள் சொல்லும்போது வெளியே கோயிலுக்குச் செல்பவர்கள் நின்று பார்ப்பார்கள்.

இவர் மிகச் சிறந்த முறையில் கற்பிக்கிறார், கற்பித்துக் கொண்டிருக்கிறார், மாணவர்களும் நன்றாகக் கற்கிறார்கள, இவர்கள் எங்களை விட மிகச் சிறந்த முறையில் கற்கிறார்கள் என்று ஆத்திரப்பட்ட பிராமணர்கள், என்ன செய்தார்கள்? என்னுடைய ஆசிரியர் ஒரு நல்ல மனிதர். சாதி ஏற்றத்தாழ்வு பாராதவர்; நல்ல ஆன்மீகவாதி. அவர் தினந்தோறும் சிற்றுண்டி அருந்துவதற்குக் காலை 8 மணி அளவில் சென்று 15 நிமிடம் கழித்து வருவார். நாங்கள் மாணவர்கள் எல்லோரும் வந்துவிடுவோம். ஆனால் அவர்  எங்களுக்கு முன்பாகவே வந்துவிடுவார்; இளைஞரைப் போலவே இருப்பார். அப்படி ஒரு துடிப்பு மிகுந்தவர். ஒரு நாள் 10 மணி ஆகியும் ஆசிரியர் வரவே இல்லை. நாங்கள் எல்லாரும். 'என்ன இது. ஊருக்கு ஏதேனும் சென்று விட்டாரா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஏறக்குறைய 10 மணிக்கு அந்த வாசலிலே மிகவும் நடக்க முடியாத நிலையில் அவர் நின்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்துக் கேட்டோம்.

என்ன ஐயா, ஏன் இப்படி நடக்கக் கூட முடியாமல் நிற்கின்றீர்களே ஏன்? என்று கேட்டோம்.
கோயிலில் இருக்கும் அர்ச்சகரே ஒரு நான்கைந்து பேரை வைத்து 80 வயதிற்கும் மேலான அந்த ஆசிரியரை அடித்திருக்கிறார் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. திருவண்ணாமலை கோயிலில் உள்ள போது நான்கைந்து பேரை வைத்து அடித்ததாகக் கூறினார். இது மாணவர்கள் மத்தியிலும் மாணவர்கள் அல்லாது அறநிலையத் துறையினர் மத்தியிலும் ஒரு பெரும் கோபத்தை உண்டாக்கியது.

எதற்காக அவரை அடித்தார்கள்? எங்களுக்கெல்லாம்  கற்றுக் கொடுத்ததற்காகவா? ஆம்.
'யாருமே இந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முன் வராத போது நீங்கள் ஏன் வந்தீர்கள்? மீண்டும் சேலத்திற்கே சென்று விடுங்கள்’  என்று 80 வயதிற்கும் மேலான அந்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள்.

பிறகு ஒரு சில காலங்கள் இந்தப் பிரச்சனையில் தான் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் நாங்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். கோயிலுக்குள் செல்லும்போதெல்லாம் கூட பிராமண அர்ச்சகர்கள் எங்களை கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாங்கள் வரும்போதெல்லாம் ஒரு வெறுப்பாகத்தான் பார்ப்பார்கள். அர்ச்சகர் என்றால் அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும். ஆனால். எதிரிகளைப் பார்ப்பது போலதான் எங்களைப் பார்ப்பார்கள். நாங்கள் தினந்தோறும் மூலவர் சன்னதிக்குச் சென்று தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி விட்டுதான் செல்வோம்.

இரண்டு ஆண்டுகாலம் தினந்தோறும் இதுதான் நடைபெற்றது. கருவறையினுள் நுழைந்து நாங்கள் 40 மாணவர்களும் பாடல் பாடுவோம். தேவாரம். திருவாசகம், ருத்ரம் எல்லாம் பாடி எங்கள் பக்தியை வெளிப்படுத்தி மகிழ்வுடன் வெளிவருவோம். அர்ச்சகர்கள் ஒரு எதிரியைப் பார்ப்பது போல் எங்களைப் பார்ப்பார்கள். அந்தக் கோயில் அதிகாரி D.C. வாசுநாதன் என்ற ஒரு ஐயா. அவரும் தமிழ் ஆர்வம் கொண்டவர். அவர் வந்து எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார்.

நல்ல மனிதர்; தமிழ் உணர்வு கொண்டவர். எங்களுக்கு ஆசிரியர்; பாடம் கற்றுக் கொடுத்ததை விட அவர் நிறைய நடைமுறை உண்மைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தினந்தோறும் வருவார். எங்களுடன் கலந்துரையாடுவார். எங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி, பேச்சுப் போட்டி நடத்தி எங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வார்; அவரும் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதி. தமிழ் உணர்வு கொண்டவர்.

எப்போதெல்லாம் அலுவலகத்திற்கு வருகிறாரோ. அப்போதெல்லாம் எங்கள் அர்ச்சகர் பயிற்சி நிலையத்திற்கு வருவார். அவருடைய ஆதரவால் திருவண்ணாமலை அர்ச்சகர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எதிரிகளாகப் பார்க்கலாம். அதை வெளிப்படுத்தினால் பாதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே நிறைய எதிர்ப்புகள் இருந்தாலும் அதிகாரிகள் மத்தியில் எங்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.

பிராமணர்களாகிய இவர்களை எதிர்க்க முடியாத நிலையில் மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
அதனால் நாங்கள் ஒரு முழுமையான அர்ச்சகர் என்ற முறையில் ஒரு சிறப்பான பயிற்சி பெற்றோம். ஆனால் எங்களுக்கோ அர்ச்சகர் பயிற்சி வாழ்நாள் பணி கிடைக்கவில்லை. என்றாலும் வாழ்வின் ஒழுக்கத்திற்கு இது ஓர் ஆதரவாக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் அர்ச்சகர்க்குப் பயின்று விட்டோம். அர்ச்சகர் ஆகப் போகின்றோம். இறைவனுக்குப் பணிச் செய்யப் போகின்றோம் என்று  மிகவும் மகிழ்வோடு இருந்தோம்.

ஆனால் பிராமணர்கள் நாங்கள் அர்ச்சகராகப் பணிபுரிய முடியாதபடி  வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் பின்னால்தான் தெரிய வந்தது . அர்ச்சகர் பயிற்சி முடிந்த பின்புதான். ஒன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு இரண்டு இரண்டு மாதங்கள் கூட்டிக் கொண்டே சென்றார்கள். அப்போது விசாரித்தபோது அதிகாரிகள் சொன்னார்கள். 'பிராமணர்களால் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு முடிகின்ற வரைக்கும் அர்ச்சகர் பயிற்சி உங்களுக்குத் தொடரப்பட்டிருக்கின்றது. எத்தனை ஆண்டுகள் வழக்கு நீட்டிக்கப்படுகிறதோ. அத்தனை ஆண்டுகாலம் உங்களுக்கு மேலும் பயிற்சி நீட்டிக்கப்படும்’ என்று D.C. வாசுநாதன் ஐயா கூறினார்.

இரண்டு ஆண்டுகள் தாம் பயிற்சி. 16 வயதிலிருந்து 24 வயது வரை  உள்ளவர்களை மட்டும்தாம் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் வயது கடந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இப்பொழுது என்ன நிலை என்றால் நாங்கள் 25, 26 வயது கடந்தவர்கள்.  எனக்கு வயது 24. இன்னமுள்ள மாணவர்கள் எல்லாம் என்னைவிட 2, 3 வயது கூடுதலாக உள்ளவர்கள். ஒரு 10 மாணவர்கள் அப்படி இருப்பார்கள். அவர்களுடைய கருத்து என்னவென்றால் 'கல்வி கற்கும் வயதை நாங்கள் கடந்துவிட்டோம். மீண்டும் எங்களால் ஓரிடத்தில் அமர்ந்து கல்வி கற்க முடியாது’ என்பது.

நாங்கள் படிக்கும் காலத்தைக் கடந்துவிட்டோம். இத்தனை ஆண்டுகள்தான் பயிற்சி என்று சொன்னீர்கள். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மீண்டும் எங்களால் பயில முடியாது. கல்வி பயிலுகின்ற காலத்தைக் கடந்த காரணத்தால், மீண்டும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதை ஒரு சிலர் எதிர்த்தனர்.
'அர்ச்சகர் பயிற்சி பயின்று விட்டோம். இனி வேறு பணிக்கு எங்களால் செல்ல முடியாது’ என்கின்றனர் சில மாணவர்கள்.

எங்கள் கிராமங்களிலும் நாங்கள் அர்ச்சகர் என்று தெரிந்தாகிவிட்டது; நாங்கள் வேறு பணிக்குச் சென்றால் எங்கள் வாழ்வியல் எங்களைப் பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து. இந்தச் சூழ்நிலையில் பிராமணர்கள் வழக்கு தொடர்ந்து விட்டார்கள். கடவுள் கொள்கையில் அனைவரும் சமம். புத்தகங்களிலே சைவ, வைணவ ஏட்டிலே 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிலே சாதிகளே குறிப்பிடப்படவில்லை.

அப்படி இருக்கும்பொழுது இறைவனுடைய கொள்கையையும் இறையுணர்வையும் இவர்கள் பெறாமல் அர்ச்சகர் பணி செய்கிறார்கள். இறை கொள்கைக்கு எதிரானவர்கள் அங்கு இருப்பதற்கே தகுதியற்றவர்கள். காரணம் கடவுள் கொள்கையையும் பின்பற்றவில்லை. சைவ, வைணவக் கொள்கையையும் பின்பற்றவில்லை. இவ்வாறு இருக்கும் போது இவர்கள் சைவ, வைணவ இந்துமதக் கொள்கை பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இது தவறு. கொடுமை. அநியாயம்.

கடவுள் கொள்கையைப் பின்பற்றுகிற பிராமணர்களாக இருந்தாலும் சரி. பிராமணரல்லாத தமிழராக இருந்தாலும் சரி. பயிற்சி பெற்ற உண்மையான ஆன்மீகவாதிகள் தாம் உள்ளே இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பிராமணரல்லாத தமிழ் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்வதற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு போடுவது இவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆக உண்மையான ஆன்மீகவாதிகளை இறைவனுக்கு அர்ச்சனை செய்பவர்களாக ஆக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது என்ன கூறுகிறோம் என்றால் தமிழரால் கட்டப்பட்ட கோயிலில் ஒரு தமிழனால் அர்ச்சனை செய்ய முடியவில்லை. தமிழரின் உரிமை என்னவாயிற்று?

எங்கள் கோயிலுக்குள் சென்று நாங்கள் அர்ச்சனை செய்யக் கூடாது என்று பிராமணர்கள் தடைவிதிப்பதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அது மட்டுமின்றி இவர்கள் ஆன்மீகக் கொள்கையையும் இந்து மதக் கொள்கையையும் பின்பற்றாதவர்கள். எனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற பிராமணர்களைத் தவிர ஒரு பிராமணன் கூட தமிழ்நாட்டிலே அர்ச்சகராக இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. இதனை நிறைவேற்ற வேண்டும்.

யாராய் இருந்தாலும் சரி, அர்ச்சகர் பயிற்சி பயின்றவர்கள்தாம் அர்ச்சகராக இருக்க முடியும். அதற்கு விதிமுறைகள் இருக்கிறது.  அரசாங்கம் மூலமாகவும் பயின்று இருக்கலாம். தனியாகவும் பயின்று இருக்கலாம். அர்ச்சகராக இருப்பவர்கள் இந்தக் கொள்கைகள். அதாவது சைவ, வைணவ, இந்துக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

இக் கொள்கையின்படி அனைத்துச் சாதியினரும் ஒன்றே; இறைவனுக்கு முன் வேறுபாடு இல்லை என்று வந்துவிடும். இந்தக் கருத்துகளைக் கொண்டவர்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது. சைவம் வைணவத்தை எதிர்க்கிற பிராமணர்கள். தமிழகத்தில் ஒரு திருக்கோயிலில் கூட அர்ச்சகராகப் பணி செய்யக் கூடாது.

மக்களிடத்திலே இதை எடுத்துக் கூறி, சைவ, வைணவக் கொள்கைகளைப் பின்பற்றாத பிராமணர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. இதை நாம் செய்ய முடியும்; செய்ய வேண்டும். இதுதான் நம் கடமை; இது இறைவன் நமக்குக் கூறியிருக்கிறார். காரணம் 63 நாயன்மார்களும் பல சாதியினராக இருக்கிறார்கள். ஆகவே இறைவன் அனைத்துச் சாதியினருக்கும் அறிவித்துச் சென்றார். இவர்களின் சாதி ஏற்றத்தாழ்வு என்னும் இந்துத்துவாவைப் புனிதமான இந்து மதத்திலே சேர்க்கக் கூடாது. இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் இந்து கோயில்களில் இருக்கக் கூடாது.

தமிழராகிய நமக்கு ஏற்பட்டுள்ள இந்த இழிவைத் துடைத்து. சாதிகளைக் கடந்த தமிழராய் ஒன்றுபட்டு பிராமணர் ஆதிக்கத்தை முறியடிப்போம்.
- அர்ச்சகர் சு. சீனிவாசன்

(கட்டுரை: தமிழர் சமயம் - செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

நன்றி: கீற்று இணையத்தளம் (www.keetru.com)

PDF இல் சேமிக்க‌

19.2.11

இந்து மதம் தமிழர்களுடைய தமிழர் சமயம்


‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களின் பொதுப்பெயராக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒரு புதுப் பெயர் என்பதைப் பார்த்தோம்.  இதனால் இந்து மதம் யாருடையது என்பதைக் காண சைவ, வைணவ மதங்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது.  இதைக் காண சைவ, வைணவ சமயங்களின் வரலாற்றை நோக்குவோம். 

சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  63 நாயன்மார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.

நாயன்மார் அறுபத்து மூவர்

வைணவ சமயத்தை வளர்த்த ஆழ்வார்கள் பன்னிருவர்.  12 ஆழ்வார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.
ஆழ்வார்கள் பன்னிருவர்


  1. சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறை.  பன்னிரு திருமுறையும் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கிறது. 
  2. வைணவ சமய இலக்கியங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன. 
  3. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான சைவக் கோவில்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது ஆகும்.  இந்த இருநூற்று எண்பது கோவில்களில் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  4. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான வைணவக் கோவில்கள் நூற்று எட்டு.  இதில் தொண்ணூற்றாறு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  5. சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் நடராசர் கோவில்.  சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறது.
தில்லை - சைவத்தின் தலைமைக் கோவில்
 வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் உள்ளது.  திருவரங்கம் தமிழகத்தில் இருக்கிறது. 
திருவரங்கம் - வைணவத் தலைமைக் கோவில்

தமிழ்நாட்டில் உருவான சைவம், வைணவம் ஆகிய இரண்டற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுக்க வேண்டுமானால் அது “தமிழர் சமயம்” என்று இருப்பதே பொருத்தமானது.  சைவம், வைணவம் ஆகிய இந்து மதம் தமிழர்களின் தமிழர் சமயம் என்பதில் ஐயமில்லை. 


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 

PDF இல் சேமிக்க‌

20.1.11

சமற்கிருத வேதங்களின் கோட்பாடுகள் இந்து மதத்தின் கோட்பாடுகள் இல்லை


        ஆரியர்களுக்கென்று மதம் எதுவும் கிடையாது.  அவர்களுக்கென்று வழிபாடு தான் உண்டு.  அவர்கள் விலங்குகளைப் பலியிட்டு, அவற்றின் புலாலை உண்டு, சோம பானம் – சுரா பானம் என்னும் மதுவகைகளை உட்கொண்டு வந்தனர். 

            வேதங்கள் சமற்கிருதத்தில் உள்ளன.  முதல் சமற்கிருதக் கல்வெட்டே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தான் காணப்படுகிறது.  (Nirad C. Chaudhuri, Hinduism, 1979 Pp. 38, 39 quot. By Dr. Alexander Harris, The development of Civilization and Religion in India and its influence on the world Society, 2001, Pp. 39-41).  எனவே வேதங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலமாகும்.  (Dr. Alexander Harris, Ibid, http://www.geocities.com/appiusforum/book/pdf). 

            கிறித்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளில் திராவிடரான வேதவியாசர் ஆரியரின் நாடோடி வழிபாட்டுப் பாடல்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்துத் தொகுத்தார்.  அவரே அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி வேதங்களாகப் பிரித்தார்.

            வேதங்களைப் பொறுத்தவரை அவை மிகப் பழமையானவை என்றும் சைவம், வைணவம் ஆகிய மதங்கள் உருவாவதற்கு அடிப்படையாய் இருந்தன என்றும் பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது.
 
            சைவம், வைணவம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் வேதங்களில் காணப்படவில்லை.  சைவ சித்தாந்தத்தின் படி மனிதனாக அவதரித்து, மனுக்குலத்தை மீட்பதற்காகப் பாடுபட்ட முழு முதல் அன்புக்கடவுள் தான் சிவன் ஆவார்.  ஆனால் வேதங்களில் காணப்படும் உருத்திரன் சிறு தெய்வங்களில் ஒருவரும் புயல்காற்றின் தெய்வமும் ஆவார்.  புயல் தெய்வமான உருத்திரனுக்கும் சிவனுக்கும் எத்தொடர்பும் இல்லை.
 
            இதைப் போல் வைணவத்தில் காணப்படும் விட்ணுவிற்கும் வேதங்களில் கூறப்படும் விட்ணுவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.  வேதத்தில் உள்ள விட்ணு என்பது கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களில் ஒன்றான சூரியனைக் குறிக்கிறது.  ஆனால் வைணவத்தின் விட்ணு முழு முதல் கடவுளாவார்.  வேதங்களில் காணப்படும் உருத்திரன், விட்ணு ஆகிய இருவரும் சிறு தெய்வங்களே அன்றி முழு முதல் கடவுளர் அல்லர். 



(முனைவர் தெ. தேவகலாவின் 'இந்தியா தோமா வழி திராவிடக் கிறித்தவ நாடே... எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)

PDF இல் சேமிக்க‌

6.1.11

இந்து மதம் என்பது தமிழர் மதமே!



            இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும். 

  • சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
  • வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். 
  • சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.
  • வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது.
  • இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும்.  அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
  •  வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
  • சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது.
  • வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது. 

             ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌