Showing posts with label கிறித்தவம். Show all posts
Showing posts with label கிறித்தவம். Show all posts

25.6.11

திருநீறா? சிலுவையா? - 6


திருநீறும் திருமண்ணும்
சைவர்கள் திருநீற்றால் தங்கள் அடையாளத்தையும் வைணவர்கள் திருமண்ணால் தங்கள் அடையாளத்தையும் தங்கள் நெற்றிகளில் இடுகின்றார்கள்.   சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னரே திருநீற்றிலிருந்து திருமண் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.  மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு மூன்றையும் திருநீறு விளக்கி நின்ற நிலையை முன்னர்ப் பார்த்தோம்.  

இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்னர் செங்கிடாரி கொல்லப்பட்டு, அதனுடைய தோல், தசை, இரத்தம் ஆகியவை சாணியுடன் சுட்டெரிக்கப்பட்டு திருநீறு தயாரிக்கப்பட்டது.  இது வெறும் நீறு அன்று.  சுத்திகரிக்கும் நீறு.  அதனால் திருநீறு ஆகிறது.  இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், தயாரிக்கப்படும் திருநீறு, சுத்திகரிக்கப் பயன்படும் திருநீறு அன்று.  

இயேசு கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் அறிவிக்கும் அடையாளமாக, பின்னர்த் திருநீறு விளங்குகிறது.  ஆகையால் கிறித்தவத்தில் திருநீறு தயாரிக்கப்படுவதற்குக் கிடாரி கொல்லப்படவோ, தோல், தசை, இரத்தம் எரிக்கப்படவோ அவசியம் இல்லை.  இவை எல்லாம் கிறித்துவுக்குள் நிறைவேறிவிட்டன.  அதனால் திருநீறு தயாரிக்க, கிடாரியின் சாணி எரிக்கப்பட்டாலே போதுமானது.  

சாணி எரிக்கப்பட்டால் அது நீறு ஆகுமே தவிர திருநீறாக எவ்வாறு ஆகும் என்று எண்ணலாம்.  கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் குறிக்கும் அடையாளமாக நெற்றியில் இடப்படுகின்ற காரணத்தால் அது வெறும் நீறு அன்று.  திருநீறாக மாறிவிடுகிறது.  

இயேசு கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் கடவுளின்
1.   தந்தை நிலை
2.   மகன் நிலை
3.   பரிசுத்த ஆவிநிலை
ஆகிய மூன்று நிலைகளையும் உலகம் அறியும் வகை ஏற்பட்டது.  இந்த மூன்று நிலைகளையும் விளக்குவதற்காகத் திருநீற்றால் மூன்று கோடுகள் இடப்படுகின்றன.   

திருநீறு,சந்தனம்,குங்குமம்   
இந்த மூன்று நிலைகளில், “மகன் மரத்தில் இரத்தம் சிந்தியதால் பாவ மன்னிப்பு ஏற்பட்டது” என்பதை விளக்க, மூன்று கோடுகளால் மகனைக் குறிக்கும் மையக் கோட்டின் மத்தியில் “மரத்தின் வழியாக இரத்தம் சிந்தினார்” என்பதைத் தெரிவிக்க, சந்தன மரத்தினாலாகிய சந்தனப் பொட்டும், அப்பொட்டின் மத்தியில் இரத்தத்தைக் குறிக்க சிவப்புக் குங்குமப் பொட்டும் இடப்பட்டு, இயேசு கிறித்துவின் நற்செய்தி முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது.  இது சைவத்தின் நிலை.  


சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னர் திருநீற்றிலிருந்து திருமண் அணியும் நிலை உருவாயிற்று.  அத்துடன் “இரத்தம் சிந்தி மீட்டெடுத்தார்” என்பதை விளக்க, “குங்குமப்பொட்டு வைப்பதை விட இரத்தம் வடிவதைக் காட்ட வேண்டும்” என்ற நிலை உருவாக்கப்பட்டது.  அதனால் நெற்றியில் படுக்கையாக இடப்பட்ட மூன்று கோடுகள் மாற்றப்பட்டு செங்குத்தாக மேலிருந்து கீழாக இடப்பட்டன.  மையக்கோடு இரத்தம் சிந்தும் கடவுளின் மகனாகக் காட்ட சிவப்புக் கோடாக மாற்றப்பட்டது.  மேலிருந்து இரத்தம் சிந்தப்பட்டதைக் காட்ட சிவப்புக் கோடு மேலே ஒடுக்கமாகவும் கீழே வரவர அகலமாகவும் அமைக்கப்பட்டது.  

அறிய இயலா நிலை
கிறித்தவத்தின் நற்செய்தியைத் தெளிவாக  வெளிக்காட்டும் இந்த அடையாளங்களைச் சைவப் பெருமக்களும் வைணவப் பெருமக்களும் தினந்தோறும் தங்கள் நெற்றிகளில் தவறாது இட்டுக்கொண்ட போதிலும், ஏன் இவ்வாறு அணிகின்றோம் என்று அவர்கள் அறிய இயலாத நிலை ஏற்பட்டது வருந்தத்தக்க ஒன்றாகும். 

பைபிளும் நெற்றியில் அடையாளமிடுதலும்
ஐரோப்பிய வழிக்கிறித்தவர்கள் நெற்றியில் அடையாளம் இடுவதில்லை.  தோமா வழிக்கிறித்தவர்களாகிய சைவர்களும் வைணவர்களும் நெற்றியில் அடையாளம் இடுகின்றார்கள்.  இது பைபிளுக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகின்றது. 
-    தொடரும்
(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?” என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

12.2.11

ஆரிய நிறவெறிக்கு அடிமைப்பட்ட கிறித்தவம்


நிறவெறிக்குத் துணை
ஐரோப்பியர்கள் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்களாயிற்றே!  இப்படியெல்லாம் (இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு இந்தோ ஐரோப்பியர்களின் தலைவர்களாகிய பிராமணர்களுக்குத் துணை போவார்களா?) செய்வார்களா? என்னும் கேள்விக்கு, கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தலைவராகிய போப்பாண்டவருக்கும் புரொடெசுடண்டு கிறித்தவர்களின் தலைவராகிய “ஆர்ச்சு பிசப்பு ஆப் காண்டர்பரி”க்கும் நம்மால் எழுதப்பட்ட கடிதங்களும் அவர்கள் நமக்கு எழுதிய விடைகளும் தக்க சான்றுகளாக அமைந்து விளங்குகின்றன.



இன அழிப்புக்குத் துணை
கிறித்தவ மதத்திற்குத் தலைமை தாங்கும் ஐரோப்பியர்கள், ஆசியாவின் கிறித்தவ மதத்தைத் தங்களுக்கு அடிமைப்படுத்தித் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்துகின்றவர்களே தவிர, கிறித்துவின் நல்ல போதனைக்காக வாழ்கிறவர்கள் அல்லர் என்பதையும் ஆரியப் பிராமணர்களின் நிறவெறியை ஆதரிக்கின்றவர்கள் என்பதையும் அவர்களின் விடைகளே நமக்கு விளக்கம் கொடுக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன.
 
உலகக் கிறித்தவ மதத்திற்குத் தலைமை தாங்கும் ஐரோப்பிய ஆன்மீகத் தலைவர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்பொழுது, ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பது எண்ணிப் பார்க்கத் தக்கது. 

ஐரோப்பியர்களின் பிடியில் ஐக்கிய நாடுகளின் சபை இருக்கிறது.  ஐக்கிய நாடுகளின் கட்டுக்கோப்பில் உலக நாடுகள் அடங்கி இருக்கின்றன.

இதனால் உலக நாடுகள் இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடைபெறும்பொழுது வேடிக்க பார்ப்பதைத் தவிர அவற்றிற்கு வேறு வழியில்லை.  இது ஓர் அவமானகரமான வெட்கப்பட வேண்டிய செயல் என்பதை
“While the so called International community is exposed in its shameful conning…”
என்னும் எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து சில திருத்தங்களுடன் பதியப்பட்டுள்ளது) 
PDF இல் சேமிக்க‌

18.1.11

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 3


ஐரோப்பிய அரசியல் மதம்
            கான்சுடன்டைன் தன் எதிரிகளை அழிக்க, சிலுவை அடையாளத்தை முதன்முதலில் பயன்படுத்தினான்.  எதிரிகளை அழிக்கச் சிலுவை அடையாளத்தைக் கான்சுடன்டைன் பயன்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை.  ஏனென்றால் அது ஐரோப்பிய அரசியல் கொலைக்கருவியே ஆகும்.  ஆனால் ஆசியாவில் தோன்றிய ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவம், கான்சுடன்டைன் வழியில் சென்று சிலுவை அடையாளத்தை ஏற்றுக்கொண்டமையால், அது ஆன்மீக இயக்கம் என்னும் நிலையில் இருந்து தவறி “ஐரோப்பிய அரசியல் மதம்” என்னும் நிலைக்கு வீழ்ந்துவிட்டதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். 

            அதனால் தன்னைக் கொலை செய்த பகைஞர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆன்மீக இயக்கம்  மறைந்து சிலுவை அடையாளத்தை மாட்டிக் கொண்டு மற்றவர்களைக் கொலை செய்த, சிலுவைப் போர் நடத்திய ஐரோப்பிய வழிக் கிறித்தவ மதத்தை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். 

சிலுவைப் போர்
சிலுவைப் போர்
            ஆகவே, பகைவர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கத்திற்கு எதிராக, போர்க்கருவியினால் பகைவர்களை அழிக்கும் ஐரோப்பியக் கிறித்தவ மதத்தின் அடையாளமாகச் சிலுவை விளங்கிக் கொண்டிருக்கிறது.  சிலுவை கிறித்தவ மதத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் இன்று வரை இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீகம், ஐரோப்பியர்களின் தலைமையின் கீழ் ஐரோப்பியர்களின் தலைமையின் கீழ் ஐரோப்பிய அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஐரோப்பிய அரசியல்
            கான்சுடன்டைன் காலம் வரை உரோமப் பேரரசு, கிறித்தவர்களை வேட்டையாடிய நிலையை நாம் திருச்சபை வரலாற்றில் மிகத் தெளிவாகப் பார்க்கிறோம்.  ஆனால்,

1.    கான்சுடன்டைன் காலத்தில் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டில் அந்த வரலாறு இல்லையே! ஏன்?
2.    திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போத்தல நடபடிகளில் பெளல் உரோமபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் கூறும் இருபத்தெட்டாம் அதிகாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

என்னும் கேள்விகளை எழுப்பினால் இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கம் ஐரோப்பிய அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டு சிலுவை அடையாளம் சிறப்பிக்கப்பட்டதன் வரலாறு தெளிவாக விளங்கும்.
  ஐரோப்பியர்களிலும் ஐரோப்பிய அரசியல் சிந்தனைகளைத் தாண்டிக் கிறித்துவின் ஆன்மீக அனுபவத்தின் அடிப்படையில் செயல்படும் கிறித்துவின் அடியார்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே!  
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகளில் இருந்து பதியப்பட்டவை)
PDF இல் சேமிக்க‌