Showing posts with label இந்து மதம். Show all posts
Showing posts with label இந்து மதம். Show all posts

21.2.11

மதம் – மண் – இனம் – மொழி – பண்பாடு


ஆகவே, ஓர் இனத்திற்கு உயிர் நாடியாக இருப்பது மதம் என்பதும் இனம் வளர்வதற்கு ஆதாரமாய் இருப்பது மண் என்பதும் மண்ணை இழந்த இனம் சிதறிப் போகும் என்பதும் மதத்தை இழந்த இனம் மறைந்து போகும் என்பதும் நமக்கு விளங்குகின்றன. 

மண்ணை இழந்த எத்தனையோ இனங்கள் சிதறிப் போனதையும் மதம் இல்லாமல் சிதறிப் போன இனங்கள் மறைந்து போனதையும் நாம் உலக வரலாற்றில் காணுகின்றோம்.

ஆகவே, தமிழ் இனம் மறையாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழர் சமயமும் தமிழ் மண்ணும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.  1. இனம்; 2. மதம்; 3. மண் ஆகிய மூன்றும் பாதுகாக்கப்பட்டால் மொழி, பண்பாடு ஆகியவை பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, தமிழ் இனத்தின் வாழ்வுக்கு, தமிழர் சமயத்தையும் தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரியதாகும். 

உணர்த்தப்படல் வேண்டும்
தமிழ் இனத்தின் வாழ்வுக்கு, தமிழர் சமயத்தையும் தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்னும் உண்மை தமிழ் இன மக்கள் ஒவ்வொருவருக்கும் சரியாக உணர்த்தப்படல் வேண்டும்.  காரணம், தமிழர் சமயம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றமையால் தமிழர் சமயமே இந்து சமயம் என்னும் வரலாற்று உண்மை புரியாமல் இருக்கிறது.

மாற்றியமைக்க வேண்டும்

இந்து சமயத்திற்கும் இந்துத்துவாவிற்கும் உள்ள வேறுபாட்டை உணரத் தெரியாமல் இந்து சமயம் ஆரியர்களுடையது என்னும் தவறான கருத்து தமிழர்களிடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டுமானால் இந்து மதமாகிய தமிழர் சமயத்தின் வரலாற்றுச் சிறப்பைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். 

நெஞ்சில் முள்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்றால், திராவிட இனம் ஆரிய இனத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கருத்துகள் அவை என்பதை நாம் அறிய வேண்டும்.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்துத்துவா வேறு; இந்து மதமாகிய தமிழர் சமயம் வேறு என்று வேறு பிரித்துக் காட்டும் ஆராய்ச்சிகள் வெளிவரவில்லை.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்த ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்குமானால் கட்டாயம் நமக்கு விடுதலையை வாங்கித் தந்திருப்பார்.  ‘நெஞ்சில் ஒரு முள்ளோடு நான் செல்லுகிறேன்’ என்று கூறிச் சென்றிருக்க மாட்டார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

((பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

20.2.11

தமிழர் சமயமும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையும்


தமிழர்கள் ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக் கொள்கையாகிய இந்துத்துவா என்னும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தமிழர்களின் இந்து சமயமாகிய தமிழர் சமயம் ஆரியப் பிராமணர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழ் இன வீழ்ச்சிக்குக் காரணம்
தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருப்பது தமிழர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுள்ள இந்துத்துவாவாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை ஆகும்.  இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை தமிழ் இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒன்றையொன்று வெறுக்கவும் பகைக்கவும் வீழ்த்தவும் தூண்டி மொத்த இனத்தையும் அழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

மலையகத் தமிழர்கள்
இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதென்றால், அதன் தொடக்கம் யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர் உள்ளங்களில் இருந்த சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மை என்பதை வரலாறு கூறுகிறது.  தமிழ் இனம் என்னும் அளவில் அவர்கள் இணைய இயலாதபடி அவர்களைப் பிரித்த முதல் எதிரி அதுவேயாகும்.  மலையகத் தமிழர்கள், குடியுரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பொழுது தமிழ் இன உணர்வோடு அதை எதிர்த்து யாழ்ப்பாணத் தமிழர்கள் குரல் கொடுக்க முன் வரவில்லை.  இலங்கையில் தமிழ் இனம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இன அழிப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் தொடக்கமாக அது அமைந்தது. 

இனமா? மொழியா?
இன்றும் தாய்த் தமிழகத்தில் தமிழ் மொழிக்காகக் குரல் கொடுக்க முன் வருகிறவர்கள், தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுக்க முன்வருவதில்லை.  மொழிக்காகக் குரல் கொடுக்கும்பொழுது சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை உள்ளத்தில் வைத்துக்கொள்ளலாம்.  இனத்திற்காகக் குரல் கொடுக்கும்பொழுது, சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை உள்ளத்தில் வைத்துக் கொள்ள இயலாது.  இனம் அழிக்கப்பட்டு விட்டால் யார் மொழியைப் பேசுவது?  இனம் அழிந்தால் மொழியும் அழிந்து போகும். 

யூதர்களின் சீயோனிய இயக்கம்
இனம் அழியாமல் பாதுகாக்கப்படுமானால் மொழி அழிந்த போதிலும் மீண்டும் அதற்குப் புத்துயிர் கொடுக்க இயலும் என்பதை உலகில் யூத இனம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. 
யூதர்களின் மொழி எபிரேயம்.  யூதர்கள் அவர்கள் நாட்டை இழந்த பொழுது உலகின் பல பாகங்களுக்கும் சிதறிச் சென்றனர்.  மொழி மறைந்தது.  மீண்டும் அவர்களுக்கு நாடு கிடைத்து ஒன்று கூடியவுடன் அவர்கள் தங்கள் மொழிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளனர் என்பதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம்.  பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் இனம் ஒன்றிணைந்ததற்குக் காரணமாய் இருந்தது அவர்களுடைய மதம்.  யூத மதம் யூத இனத்தை ஒன்றிணைத்தது.  யூத இனம் அழியாமல் பாதுகாத்தது.  யூதர்கள் மீண்டும் நாட்டைப் பெற்ற பொழுது, யூதர்களின் மொழிக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது.
 
இனத்தை அழியாமல் பாதுகாப்பது மதம்
ஆகவே, சிதறிக்கப்பட்டாலும் இனத்தை அழியாமல் பாதுகாப்பதற்கும் ஒன்றிணைப்பதற்கும் காரணமாய் இருப்பது மதம் என்பதையும் மதத்தால் ஒன்றிணைக்கப்பட்ட இனம், தனக்குரிய மண் ஆகிய நாடு கிடைத்துவிட்டால் அழிந்து போன தங்கள் மொழியை மீண்டும் உயிர் பெறச் செய்ய இயலும் என்பதையும் யூத இனம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

19.2.11

இந்து மதம் தமிழர்களுடைய தமிழர் சமயம்


‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களின் பொதுப்பெயராக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒரு புதுப் பெயர் என்பதைப் பார்த்தோம்.  இதனால் இந்து மதம் யாருடையது என்பதைக் காண சைவ, வைணவ மதங்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது.  இதைக் காண சைவ, வைணவ சமயங்களின் வரலாற்றை நோக்குவோம். 

சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  63 நாயன்மார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.

நாயன்மார் அறுபத்து மூவர்

வைணவ சமயத்தை வளர்த்த ஆழ்வார்கள் பன்னிருவர்.  12 ஆழ்வார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.
ஆழ்வார்கள் பன்னிருவர்


  1. சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறை.  பன்னிரு திருமுறையும் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கிறது. 
  2. வைணவ சமய இலக்கியங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன. 
  3. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான சைவக் கோவில்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது ஆகும்.  இந்த இருநூற்று எண்பது கோவில்களில் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  4. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான வைணவக் கோவில்கள் நூற்று எட்டு.  இதில் தொண்ணூற்றாறு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  5. சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் நடராசர் கோவில்.  சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறது.
தில்லை - சைவத்தின் தலைமைக் கோவில்
 வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் உள்ளது.  திருவரங்கம் தமிழகத்தில் இருக்கிறது. 
திருவரங்கம் - வைணவத் தலைமைக் கோவில்

தமிழ்நாட்டில் உருவான சைவம், வைணவம் ஆகிய இரண்டற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுக்க வேண்டுமானால் அது “தமிழர் சமயம்” என்று இருப்பதே பொருத்தமானது.  சைவம், வைணவம் ஆகிய இந்து மதம் தமிழர்களின் தமிழர் சமயம் என்பதில் ஐயமில்லை. 


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 

PDF இல் சேமிக்க‌

14.2.11

அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?


மதம்

‘தமிழ் இனம் சிங்களர்களால் அழிக்கப்பட்டது’ என்பதில் சிங்களர்கள் ஆரிய இனம் என்று நம்பப்படுகின்ற காரணத்தால் இனம் தொடர்பாக ஆரிய, திராவிட இனம் தொடர்பானவற்றைப் பார்த்தோம்.  சீனா இலங்கைக்கு உதவும் காரணமான இனம் தாண்டிய மதம் தொடர்பானவற்றைப் பார்க்க வேண்டிய இன்றியமையாமை நமக்கு உள்ளது.  தமிழ் இனத்தை அழித்த சிங்களர்கள் ஆரிய இனத்தவர்கள் என்று நம்பப்பட்ட காரணத்தால், ஆரிய இனத்தோடு தங்களை இணைத்து நோக்கும் ஐரோப்பிய நாடுகளின் துணை சிங்களர்களுக்குக் கிடைத்தது.

சிங்களர்கள் பெளத்த மதத்தவர்கள் என்பதால், பெளத்தர்கள் அதிகமாக வாழும் சீனாவின் உதவியும் அவர்களுக்குக் கிடைத்தது.  இலங்கைத் தமிழர்கள் திராவிட இனத்தவர் என்பதால் ஆரிய இனத்தவரின் எதிர்ப்பு இவர்களுக்கு ஏற்பட்டது.  இலங்கைத் தமிழர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? என்னும் அடுத்த கேள்வி இப்பொழுது எழுகின்றது. 

இந்து மதத் தலைவர்கள்

திரிகோணமலையில் சிதைக்கப்பட்ட கோவில்


இலங்கைத் தமிழர்கள் இந்து மதத்தினர் என்பது உலகம் அறிந்துள்ள உண்மை.  இலங்கைத் தமிழர்களை அழித்த பெளத்த சிங்களர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையும் இந்து மதக் கோயில்களையும் அழித்தமை அனைவராலும் அறியப்பட்டுள்ளது. 



 இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையும் இந்து மதக் கோயில்களையும் சிங்களர்கள் அழிக்கும்பொழுது உலகிலுள்ள இந்து மதத் தலைவர்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்காதது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.  இந்து மதத் தலைவர்கள் என்று உலகில் யாருமே இல்லையா?

இந்துத்துவாத் தலைவர்கள்

இந்தியாவில் இந்துத்துவாத் தலைவர்கள் இருக்கின்றார்களேயன்றி இந்து மதத் தலைவர்கள் என்று யாரும் இல்லை என்பது சற்று ஆழ்ந்து நோக்க வேண்டிய குறிப்பு ஆகும். 

(இது பற்றிய விளக்கத்திற்கு இந்துத்துவா வேறு இந்து மதம் வேறு என்னும் பதிவையும் படிக்க).  இலங்கைத் தமிழர்கள் இந்துக் கோவில்களையுடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்களே தவிர, மதத்தோடும் கடவுளோடும் தொடர்பில்லாத இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். 

இந்தியாவில் இந்துத்துவாத் தலைவர்கள் இருக்கின்றார்களே தவிர இந்து மதத் தலைவர்கள் இல்லை.  

இந்து மதத் தலைவர்கள் இந்தியாவில் இல்லாதபடியால், இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க மதத் தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. 

இந்தியாவில் இந்து மதத் தலைவர்கள் இல்லாமல் போகலாம்.   அப்படியானால் இந்தியாவைத் தவிர உலகில், இந்து மதத் தலைவர்கள் எங்குமே இல்லையா? என்னும் கேள்வி எழுகின்றது.  இந்து மதத் தலைவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் எங்குமே இப்பொழுது இல்லை என்பது தான் நடைமுறை உண்மையாக இருக்கின்றது. 

இந்து மதத் தலைவர்கள் அல்லர்!
இந்திய ஆரியப் பிராமணர்களும் தங்களை ஆரிய இனத்தினர் என நம்பும் ஐரோப்பியர்களும் இலங்கைத் தமிழ் இன அழிப்புக்குக் காரணமாக விளங்கினார்கள் என்றால், இவர்கள் இருபகுதியினரையும் ஒன்றிணைத்து இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் இன அழிப்பைச் செய்தது இந்துத்துவாக் கொள்கை என்பதே வரலாறு ஆகும். 


இந்துத்துவாக் கொள்கை, சிங்களர்களையும் இந்தியப் பிராமணர்களையும் ஐரோப்பியர்களையும் ஆரிய இனம் என்னும் பெயரால் ஒன்றிணைத்து இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இனத்தை அழித்தது என்பதே வரலாற்று உண்மை ஆகும்.

இந்துத்துவா - இந்து மதம் இல்லை
மதம் இல்லாத இந்துத்துவா, மதக் கொள்கையையுடைய இந்து மதத்தை அழித்தமை இலங்கையில் நடைபெற்றுள்ளது.  காரணம் இந்து மதத்திற்குத் தலைவர்கள் இல்லை.  ஆகவே, இந்து மதத்திற்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை.  இதனால் இலங்கையில் இந்து மத மக்களும் இந்து மதக் கோயில்களும் அழிக்கப்பட்டனர் என்பதை எவராலும் மறுத்தல் இயலாது.



(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து சில திருத்தங்களுடன் பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

6.1.11

இந்து மதம் என்பது தமிழர் மதமே!



            இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும். 

  • சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
  • வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். 
  • சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.
  • வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது.
  • இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும்.  அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
  •  வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
  • சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது.
  • வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது. 

             ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌